வருட ராசி பலன் 2021
மிதுனம்: குணாதிசயங்கள்
மிதுன ராசியினர் பன்முகத்திறமை வாய்ந்த நபர்கள். இவர்கள் பொதுவாக வணிகத் துறையில் இருப்பர். இவர்களிடம் நல்ல தொடர்பாடல் திறமை, புதுமை மற்றும் புத்திசாலித்தனம் காணப்படும். இருப்பினும் இவர்கள் விரைவான, திறமையான முடிவுகள் எடுக்கும் திறமை அற்றவர்கள். அவசர செயல்கள் / முடிவுகள் காரணமாக தவறுகளை செய்வார்கள். ஆனால் அதனை திருத்திக் கொள்ளும் திறமை இவர்களுக்கு உண்டு. மிதுன ராசியினர் நடைமுறைக்கேற்ப நடந்து கொள்வர். இவர்கள் தன்னார்வத்துடன் செயல்படுபவர்கள்.
ராசி பலன் - மிதுனம்
பொதுப்பலன்கள்: இந்த வருடம் மிதுன ராசி அன்பர்களுக்கு பணி மற்றும் தொழில் குறித்த பல வாய்ப்புகள் நாடி வரும். இந்த வாய்ப்புகளை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் சிறந்த வளர்ச்சி காண இயலும். கர்மகாரகன் என்று கூறப்படும் சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். எட்டாம் வீடு என்பது எதிர்பாராத லாபத்தையும் நஷ்டத்தையும் குறிக்கும். உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீடாகிய ரிஷப ராசியில் ராகு சஞ்சரிக்கிறார். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடாகிய கும்பத்தில் சஞ்சரிக்கும் ஏப்ரல் 6 முதல் செப்டம்பர் 15 வரையிலான காலக் கட்டங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான காலக் கட்டங்கள் ஆகும். செப்டம்பர் 15 முதல் நவம்பர் 20 வரையிலான காலக் கட்டங்களில் நீங்கள் சில சவாலான தருணங்களை சந்திக்க நேரும். நவம்பர் 20க்குப் பிறகு உங்களுக்கு எல்லா விதத்திலும் நன்மை கிட்டும் நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த வருடம் உங்களுக்கு சில எதிர்பாராத லாபங்கள் மற்றும் நஷ்டங்கள் இரண்டும் இருக்கும். மிதுன ராசி மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது. இந்த வருடத்தின் ஆரம்ப மாதங்கள், வெளிநாடு சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் மற்றும் பராமரிப்பு குறித்த செலவுகள் ஏற்படும். பிப்ரவரி மாத நடுப் பகுதி முதல் ஏப்ரல் மாத நடுப் பகுதி வரை சுக்கிரன் அஸ்தங்கம் அடைவதன் காரணமாக வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு ஏற்படும் திருமணமாகாதவர்களுக்கு தக்க துணை கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
வேலை: இந்த வருடம் மிதுன ராசி அன்பர்களுக்கு பல வாய்ப்புகள் தேடி வரும். ஆனால் எல்லாவற்றிற்கும் ஆசைப் பட்டு விடக் கூடாது. எந்த வாய்ப்பு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கண்டு அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான கர்ம வீட்டின் அதிபதி குரு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருந்து உங்கள் பணி அல்லது தொழிலில் பல தடைகளை அளிப்பார். ஆனால் நீங்கள் கவனமுடன் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் உங்களுக்கு பணியிடத்தில் மதிப்பும் பதவி உயர்வும் கிட்டும். ஆனால் செப்டம்பர் முதல் நவம்பர் இடைப்பட்ட காலம் வரை பணியிடத்தில் சக பணியாளர்கள், மேலதிகாரிகள் அல்லது தொழில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். உங்கள் அறியாமையை அவர்கள் தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது நீங்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் சிறப்பாக செயல்படலாம். சிலருக்கு வேலை மாற்றம் கிட்டும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருக்கும் போது நீங்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
காதல் / திருமணம்: மிதுன ராசி அன்பர்களின் காதல் மற்றும் குடும்ப உறவைப் பொறுத்தவரை 2021வருடம் சிறப்பாக இருக்கும். இந்த வருடம் உங்கள் கவனம் முழுவதும் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருக்கும். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் குரு மற்றும் சனி உங்கள் இரண்டாம் வீட்டை பார்வையிடுவார். இதனால் வீட்டில் நேர்மறை போக்கு இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை கூடும். ஜூன் மாதவாக்கில் சுப நிகழ்ச்சி ஒன்றிற்காக நீங்கள் உங்கள் நேரம், பணம் மற்றும் ஆற்றல் மூன்றையும் செலவு செய்வீர்கள். இந்த வருட முடிவில் உங்களுக்கு விருப்பமில்லாத விஷயங்கள் நடந்தாலும் நீங்கள் அதனைப் பொறுமையுடன் கையாள்வீர்கள். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியன் மற்றும் புதன் காரணமாக உங்கள் வாழ்க்கைத் துணையின் போக்கில் காணப்படும் மாற்றம் உங்களை பாதிக்கும். சுக்கிரன் காரணமாக மே ஜூன் மாதங்களில் கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வருட ஆரம்பத்தில் உங்கள் ஐந்தாம் வீட்டை பார்க்கும் செவ்வாய் காரணமாக உங்கள் குழந்தையிடம் கண்டிப்பு காட்டுங்கள். ஆனால் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.
நிதிநிலைமை: குரு மற்றும் சனி உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் இந்த வருடம் உங்கள் நிதிநிலை சாதாரணமாக இருக்கும். லாபமும் இன்றி நஷ்டமும் இன்றி நடுநிலையுடன் இருக்கும். கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல பலன்களை அளிப்பார். ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் உங்களுக்கு செல்வம் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. ராகு உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும் எனவே நீங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு பட்ஜெட் அமைத்து அதற்குள் செலவுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்தோஷப்படுத்த நீங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் சிலவற்றை வாங்குவீர்கள். நீங்கள் சொத்து வாங்கல் மற்றும் விற்றல் குறித்த முடிவுகள் எடுக்கும் போது நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். இந்த வருடம் ஆபத்தான முதலீடுகளை மேற்கொள்ளாதீர்கள். ஏனெனில் சில தொல்லைகளை நீங்கள் சந்திக்க நேரலாம்.
மாணவர்கள்: மிதுன ராசி மாணவர்களுக்கு இந்த வருடம் சில ஏமாற்றங்களை சந்திக்க நேர்ந்தாலும் நல்ல பலன்களும் கிடைக்கப்பெறுவீர்கள். மேல் படிப்பிற்காக பலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பினையும் பெறுவீர்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். கேது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது நீங்கள் கல்வி சம்பந்தமான போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள். படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் பொறுமையுடன் இருக்க வேண்டும். இந்த வருடம் வெளிநாடு சென்று பயில விரும்பும் மாணவர்களை விட வேலை வேண்டி செல்பவர்களுக்கு இது சாதகமான வருடமாக இருக்கும். வெளிநாட்டுக்கு பிரயாணம் செய்யும் போதும் அங்கு தங்கியிருக்கும் போதும் கவனமுடன் இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்: குருவும் சனியும் இணைந்து எட்டாம் வீட்டில் இருப்பதும் கேது 6 ஆம் வீட்டில் இருப்பதும் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுவதைக் குறிக்கின்றது. அதிலும் குறிப்பாக ரத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உணவு உண்ணும் முறை மற்றும் வாழ்க்கை முறையில் கவனமாக இருங்கள். துரித உணவு உங்கள் ஆரோக்கியத்தை சீர் குலைக்கும். உங்கள் கண்கள், வயிறு மற்றும் தூக்கம் இவைகளில் கவனம் தேவை. யோகா மற்றும் தியானம் போன்றவற்றை தினமும் மேற்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மனப் பதட்டம் குறையும். வாழ்வில் வரும் ஏற்ற இறக்கங்கள் குறித்து நீங்கள் மனம் தளராதீர்கள். பொறுமையுடன் எந்த விஷயத்தையும் கையாண்டால் உங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ளலாம்.
பரிகாரங்கள்:
வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்
• ஜோதிடர்கள் ஆலோசனை பெற்று மரகதக் கல்லை அணிந்து கொள்ளுங்கள்
• புதன் கிழமை அன்று ஏழை மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கு பச்சை நிற ஆடை தானம் அளியுங்கள்.
• ஓம் ஸ்ரீ புதாய நமஹ – இந்த புதன் மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்
• பச்சைக் காய்கறிகள் மற்றும் கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
• குருமார்கள் மற்றும் வயதானவர்களுக்கு உதவி செய்யுங்கள்
• சனிக்கிழமைகளில் காகம் மற்றும் வளர்ப்பு விலங்குகளுக்கு உணவளியுங்கள்
சாதகமான மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர்
சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், அக்டோபர்