வருட ராசி பலன் 2021
கடகம்: குணாதிசயங்கள்
கடக ராசியினர் கற்பனைத் திறம் மிக்கவர்கள். இவர்கள் பிறரின் கருத்துக்களை எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். இவர்கள் நுண்ணுணர்வு மிக்கவர்கள். உணர்ச்சிப் பூர்வமானவர்கள். இரக்கமிக்கவர்கள். இவர்களிடம் புத்திசாலித்தனம் மற்றும் படைப்பாற்றல் காணப்படும். அனுசரித்து போகக்கூடியவர்கள். மென்மையாகப் பேசும் இயல்பு உடையவர்கள். இவர்கள் திடீரென்று எதிர்பாராத விதமாக மாறக் கூடியவர்கள். சில சமயங்களில் திடீரென்று கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.சில சமயங்களில் அன்புடன் நடந்து கொள்வார்கள். சில சமயங்களில் அடக்கமாக அல்லது பயந்த சுபாவத்துடன் இருப்பார்கள். சில சமயங்களில் கலகலப்பாக தைரியமாக இருப்பார்கள். பொறுமை காப்பதன் மூலம் தேவையற்ற சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம்.
ராசி பலன் - கடகம்
பொதுப்பலன்கள்: கடக ராசியினரைப் பொறுத்தவரை இந்த வருடம் சில போராட்டங்களை சந்திக்க நேர்ந்தாலும் வேலையைப் பொறுத்தவரை மிகச் சிறந்த வருடமாக அமையும். வருடத்தின் ஆரம்பத்தில் மற்றும் கடைசி கால் பகுதியில் குரு மற்றும் சனி உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்கள். இந்தக் காலக் கட்டங்கள் வியாபாரம் மற்றும் தொழில் செய்வதற்கு ஏற்ற காலம் ஆகும். மேலும் செவ்வாய், மேஷம், விருச்சிகம், மற்றும் மகரத்தில் இருக்கும் போது உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இந்த வருடம் உங்கள் சமூக அந்தஸ்து உயரும். நட்பு வட்டாரங்கள் பெருகும். அது உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்வதற்கு உதவும். வருடத்தின் ஆரம்பத்தில் நிதிநிலை சாதகமாக இருக்காது. மாணவர்களுக்கு இந்த வருடத்தின் சில மாதங்கள் வெற்றியை அளிக்கும் மாதங்களாக இருக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை சாதகமான மாதம் ஆகும். ஐந்தாம் வீட்டில் கேதுவின் சஞ்சாரம் காரணமாக உங்களுக்கு கவனச் சிதறல் ஏற்படும் எனவே நீங்கள் மனதை ஒருமுகப்படுத்தி கடினமாக உழைத்துப் படிக்க வேண்டும். குடும்பத்தைக் குறிக்கும் நான்காம் வீட்டை (உங்கள் ராசிக்கு நாலாம் வீடு) சனி பார்ப்பதால் குடும்ப வாழ்வில் சில சவால்களை சந்திக்க நேரும். எனவே குடும்பத்தில் சில பிரச்சினைகள் எழும். வேலை நிமித்தமாக நீங்கள் சில மாதங்கள் உங்கள் குடும்பத்தைப் பிரிய நேரும். சனி மற்றும் குரு உங்கள் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும். இதன் காரணமாக திருமண வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சனி பகவான் காரணமாக பதட்ட நிலை இருந்தாலும் குரு பகவான் உங்களைக் காப்பார். பிப்ரவரி முதல் ஏப்ரல், செப்டம்பர் இடைப் பகுதி முதல் நவம்பர் வரை குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். மற்ற மாதங்களில் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ரோக ஸ்தானம் என்று கூறப்படும் ஆறாம் வீட்டின் அதிபதி குருவுடன் சனி இணைந்து உங்கள் ஏழாம் வீட்டில் இருப்பதால் முட்டி மற்றும் இடுப்பு தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்புள்ளது. பதினொன்றாம் வீட்டில் இருக்கும் ராகு உங்களுக்கு பல நன்மைகளைச் செய்வார்.
வேலை: பணியைப் பொறுத்தவரை இந்த வருடம் சாதகமான வருடமாக இருக்கும். வருடத்தின் ஆரம்பத்தில் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும். இது உங்கள் வேலை குறித்து சிறந்த கிரக அமைவாக இருக்கும். இந்த வருடம் முழுவதும் சனி உங்கள் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தை பெருக்கும். சமூகத் தொடர்புகள் அதிகரிக்கும். பணியில் பதவி உயர்வு கிட்டும். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சனியுடன் குரு இணைந்து இருபது உங்கள் தொழில் விரிவாக்கத்திற்கு ஏற்ற கிரக அமைப்பு ஆகும். குறிப்பாக சுய தொழில் செய்பவர்களுக்கு இது சாதகமான கிரக அமைவு ஆகும். ராகுவும் உங்கள் பதினொன்றாம் வீட்டில் இருப்பது உங்கள் ஆதாயத்தைக் கூட்டும். வருடத்தின் முதல் கால் பகுதியில் நீங்கள் வேலை நிமித்தமாக நீங்கள் குறுகிய பயணத்தை மேற்கொள்வீர்கள். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் குரு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள், கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் போன்றவற்றை விலக்க வேண்டும். எட்டாம் வீட்டில் குரு இருக்கும் போது நீங்கள் மேற்கொள்ளும் பயணம் உங்கள் விருப்பத்திற்கு மாறானதாக இருக்கும்.
காதல் / திருமணம்: கடக ராசி அன்பர்களின் குடும்ப வாழ்க்கையில் இந்த வருடம் சில பதட்டமான நிலை இருக்கும். சனி மற்றும் செவ்வாய் உங்கள் நான்காம் வீட்டை பார்பாதால் வீட்டில் சலசலப்பு இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் பெற்றோரின் ஆதரவு கிடைக்காத காரணத்தால் நீங்கள் மன வருத்தத்திற்கு ஆளாவீர்கள். யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள். இதுவே அமைதிக்கு வழி வகுக்கும். சனி மற்றும் குரு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் போதெல்லாம் மற்றும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குரு உங்கள் இரண்டு மற்றும் நான்காம் வீட்டை பார்க்கும் போதும் உறவு முறை சீராக இருக்கும். உங்கள் குடும்பத்தில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் புதிய உறுப்பினர் வருகை ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையை காயப்படுத்தாத வகையில் நடந்து கொள்ளுங்கள். சில சமயங்களில் உங்களுக்கு வாழ்க்கைத் துணையின் மீதான ஈர்ப்பை விட ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். எனவே லௌகீக வாழ்க்கை மற்றும் ஆன்மீக வாழ்க்கை இரண்டையும் சமநிலைப் போக்குடன் காணுங்கள். பிப்ரவரி மாதம் சுக்கிரன் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது உங்கள் காதல் வாழ்க்கை மீண்டும் மலரும்.
நிதிநிலைமை: உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். வருடத்தின் ஆரம்பத்தில் சில கடன் தொல்லைகளை நீங்கள் சந்திக்க நேரும். எனவே செலவுகள் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மார்ச் மாதத்திற்குப் பிறகு லாபங்கள் கிட்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் மற்றும் மன நலத்திற்காக நீங்கள் சில செலவுகளை மேற்கொள்ள நேரும். ஆகஸ்ட் முதல் நீங்கள் சில நிதி ஆதாயங்களைக் காண்பீர்கள். இந்த மாதங்களில் உங்கள் செலவுகள் குறையும். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் தந்தை வழி உறவினர்களின் மூலம் நீங்கள் சில சொத்துக்களைப் பெறுவீர்கள். பதினொன்றாம் வீட்டில் இருக்கும் ராகு உங்கள் வரவு, செலவு, மற்றும் சேமிப்பு குறித்த விருப்பங்களை நிறைவேற்றித் தருவார். குடும்பத்தில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்காக நீங்கள் சில ஆடம்பரச் செலவுகளை மேற்கொள்வீர்கள். நீங்கள் சில முதலீடுகளையும் மேற்கொள்வீர்கள்.
மாணவர்கள்: கடக ராசி மாணவர்கள் சில சவால்களைத் தாண்டி வெற்றி காண்பார்கள் இந்த வருடத்தின் ஆரம்ப காலங்கள் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். என்றாலும் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருக்கும் கேது காரணமாக உங்களுக்கு கவனச் சிதறல் ஏற்படும். ஏப்ரல் மாதம் குரு எட்டாம் வீட்டிற்கு செல்கிறார். இது சாதகமான சஞ்சாரம் இல்லை. உங்கள் படிப்பில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். யோகா அல்லது தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் மன வலிமை கூடும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்தில் இடைப் பகுதிகளில் வெற்றி காண்பார்கள். இந்த வருடத்தின் இடைப் பகுதியில் மேற் படிப்பு படிக்க வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.
ஆரோக்கியம்: கடக ராசி அன்பர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதியாக இருக்கும் சனி ஆறாம் அதிபதியான குருவுடன் இணைந்து ஏழாம் வீட்டில் இருப்பதால் சில எதிர்பாராத உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். வருடத்தின் முதல் கால் பகுதியில் நீங்கள் உங்கள் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். சிறிய அளவில் உடல் நலக் கோளாறு இருந்தாலும் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. செப்டம்பர் 15முதல் நவம்பர் 20 வரையிலான காலக் கட்டத்திற்குள் உங்கள் உடல் நிலை படிப்படியாக சீராகும். துரித உணவு, எண்ணெய் கலந்த உணவு தவிர்க்க வேண்டும். முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குருவும் சனியும் உங்கள் லக்னத்தைப் பார்ப்பதால் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரங்கள்:
வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்
• ஜோதிடரின் ஆலோசனை பெற்று முத்து மோதிரம் அணிந்து கொள்ளவும்
• தினமும் தண்ணீர்/ பால் அருந்த வெள்ளியினால் ஆன கோப்பையைப் பயன்படுத்தவும்
• ஹனுமான் சாலீசா அல்லது குரு மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்
• திங்கட்கிழமை சிவன் கோவிலுக்கு செல்லவும். செவ்வாய்க் கிழமை ஹனுமார் கோவிலுக்கு செல்லவும்
• வியாழக்கிழமை விரதம் மேற்கொண்டு ஆன்மீக அன்பர்களுக்கு அன்னதானம் அளிக்கவும்
சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர்
சாதகமற்ற மாதங்கள் : ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்,நவம்பர், டிசம்பர்