மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2021
ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2020-2021 ஆம் ஆண்டில் மேஷம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!
மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்
குருபகவான் 10 ம் வீட்டில் அமர்கிறார் என்ற பயம் உங்களுக்குத் தேவையில்லை. குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் படுகிறது. 2-ம் இடம் தன, குடும்ப, வாக்கு ஸ்தானம். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பேச்சாற்றல் வெளிப்படும். சாதுர்யமாகப் பேசி சகலத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வீடு கட்டுவீர்கள். நல்ல வசதியான வீட்டுக்கு மாறுவர். இதுவரை கஷ்டப்படுத்திய கடன்கள் இனி இல்லை. கொஞ்சம் சேமிக்கவும் முடியும்.
உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு இருப்பதால், அலுவலகப் பணிகளில் இறுக்கமான சூழ்நிலை ஏற்படும். வேலையில் இடமாற்றம் உண்டாகலாம். ஒரே நாளில் நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். என்றாலும் உங்கள் முயற்சியால் முடித்து காட்டுவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். மனஇறுக்கம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் இருங்கள். முக்கியமான ஆவணங்களைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
குரு பகவானின் சஞ்சார பலன்கள்:
15.11.2020 முதல் 5.1.2021 வரை
இந்தக் காலகட்டத்தில் குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் அனுகூலமான பலன்களே ஏற்படும். பூர்விகச் சொத்திலிருந்த வில்லங்கம் நீங்கும். தேங்கியிருந்த அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன்களை அடைப்பீர்கள்.
6.1.2021 முதல் 4.3.2021 வரை
குருபகவான் திருவோணம் நட்சத்திரத்தில் செல்வதால் வசதியுள்ள வீட்டிற்குக் குடி புகுவீர்கள். மனக்கவலைகள் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும். வீடுகட்டும் திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்
5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை
செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் உங்களின் திறமை கூடும். சகோதர உறவுகள் பக்க பலமாக இருப்பார்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். உங்களின் ஆசைப்படி புதிய வீட்டு, மனை வாங்குவீர்கள்.
23.5.2021 முதல் 22.7.2021 வரை
குருபகவான் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் செல்வதால் மனதில் கவலைகள் தோன்றும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
6.4.2021 முதல் 14.9.2021 வரை
இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அதிசாரமாக 11 ம் வீடான கும்பத்தில் பிரவேசிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் புதிய தெம்பு பிறக்கும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரங்கள் தேடிவரும்.
வியாபாரிகளுக்கு:
கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். கடன் தருவதைத் தவிர்க்கவும். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். பங்குதாரர்களிடம் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு:
10-ம் வீட்டில் குரு அமர்வதால் பணிச்சுமை அதிகரிக்கும். கடினமாக உழைத்தும் பலனில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வரும். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். அடிப்படை உரிமைக்காக நீங்கள் போராட வேண்டி வரும். என்றாலும் அனைத்திலும் மீறி சாதிப்பீர்கள்.
மொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி உங்களைச் செம்மைப்படுத்துவதாகவும் சமூகத்தில் வளைந்துகொடுத்துப் போகும் கலையைக் கற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: திண்டிவனத்துக்கு அருகிலுள்ள மயிலம் தலத்தில் அருளும் ஸ்ரீமுருகப்பெருமானை, சஷ்டி திதி நாளில் சென்று தீபமேற்றி வணங்கி வாருங்கள்; வாழ்வில் உயர்வு பெருவீர்கள்.