துளசி யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
துளசியில் மருத்துவ குணங்கள் இருப்பதால், நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மட்டுமின்றி, உணவுகளில் சுவைக்காகவும் வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு பொருள் எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அதில் சில பக்கவிளைவுகளும் இருக்கும்.
சிறுவயது முதலாக நாம் மிகவும் புனிதமான செடியாக கருதப்படும் துளசி பல நோய்களைக் குணப்படுத்தவல்லது என்று கேட்டிருப்போம். சொல்லபோனால் ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முக்கிய பொருளாக துளசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏனெனில் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இந்தியாவில் துளசி செடியில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக கருதி வழிபடுவார்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் இந்த துளசி செடி இருப்பதையும் காணலாம்.
துளசியில் மருத்துவ குணங்கள் இருப்பதால், நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மட்டுமின்றி, உணவுகளில் சுவைக்காகவும் வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு பொருள் எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அதில் சில பக்கவிளைவுகளும் இருக்கும்.
அப்படித் தான் துளசியிலும் ஒருசில பக்கவிளைவுகள் உள்ளன. கீழே துளசியின் பக்கவிளைவுகள் மற்றும் யாரெல்லாம் துளசி சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது
புதினா குடும்பத்தைச் சேர்ந்த நல்ல நறுமணம் கொண்ட மூலிகை தான் துளசி. இந்த துளசி கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் கருவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் இது கருப்பையில் சுருக்கங்களை ஏற்படுத்தி, கருச்சிதைவுக்கு வழிவக்கும். எனவே கர்ப்பிணிகள் துளசி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள்
பல ஆய்வுகள் துளசியானது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும் என்று கூறியது. ஆனால் ஏற்கனவே சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்து வருபவர்கள், துளசியை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அறிக்கைகளின் படி, துளசி இரத்த சர்க்கரை அளவை கடுமையாக குறைத்துவிடும்.
கருவுறுதலை பாதிக்கும்
விலங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், துளசி இரு பாலினத்தவர்களின் கருவுறுதலையும் பாதிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் துளசியானது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம், விரைவிதைகள், அட்ரீனல் சுரப்பிகள், புரோஸ்டேட், கருப்பை போன்ற இனப்பெருக்க உறுப்புகளின் எடையைக் குறைக்கலாம் என்பதையும் ஆய்வுகள் நிரூபித்தன.
இரத்தத்தை மெலிதாக்கும் பண்புகள்
துளசியில் உடலில் உள்ள இரத்தத்தை மெலிதாக்கும் பண்புகள் உள்ளன. அல்லோபதி மருந்துகளை உட்கொள்ள விரும்பாதவர்களுக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் என்று நிரூபிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே இரத்த உறைதல் எதிர்ப்பு/இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள் துளசி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்
துளசியில் ஏராளமான யூஜெனோல்கள் உள்ளன. இந்த யூஜெனோல் கிராம்பிலும் காணப்படுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக யூஜெனோலை உட்கொண்டால், அது கல்லீரல் பாதிப்பு, குமட்டல், வயிற்றுப்போக்கு, வேகமாக இதயத்துடிப்பு மற்றும் வலிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பதை உங்களுக்குத் தெரியுமா?
பற்களுக்கு நல்லதல்ல
துளசி இலைகளை அதிகம் மென்று சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கான விஞ்ஞான காரணம் என்னவென்றால், அதில் பாதரம் உள்ளது. இது பற்களை கறைப்படுத்தும் மற்றும் பற்களின் நிறமாற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே துளசியை மென்று சாப்பிடுவதைக் குறைக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. TOI-இன் அறிக்கைகளின் படி, துளசி இலைகள் இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டவை மற்றும் நமது வாய் காரத்தன்மை கொண்டது. எனவே துளசியை அதிகமாக மென்று சாப்பிடும் போது, அது பற்களில் உள்ள எனாமலை கரைக்கக்கூடும்.