பிலவ வருடம் 2021; பொது பலன்கள் - உற்பத்தித் தொழிலில் முன்னேற்றம்; விவசாயம் செழிக்கும்; ஷேர் மார்க்கெட் லாபம் தரும்!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லாரும் எல்லாமும் பெற்று வளமோடு வாழ எம்பெருமான் முருகன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
வணக்கம் வாசகர்களே.
உங்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லாரும் எல்லாமும் பெற்று வளமோடு வாழ எம்பெருமான் முருகன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி, புதன்கிழமை, சித்திரை 1ம் தேதி பிலவ ஆண்டு பிறக்கிறது.
தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் இடைக்காட்டுச் சித்தர் அந்தந்த ஆண்டுகளுக்கான பலன்களை வெண்பாவாக பாடி வைத்துள்ளார்.
பிலவ ஆண்டுக்கான இடைக்காட்டுச் சித்தர் பாடிய வெண்பா:
"பிலவத்தில் மாரி கொஞ்சம் பீடை மிகும் ராசர்
சல மிகுதி துன்பம் தரும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மை
பாலுமின்றிச் செய்புவனம் பாழ்"
இந்தப் பாடலுக்கான விளக்கம்... பிலவத்தில் மழை அளவு கொஞ்சமாகவே இருக்கும். நாடாளும் அரசர்களுக்கு நோய் உண்டாகும். பருவம் தவறிப் பெய்யும் மழையால் துன்பம் உண்டாகும். ஆடு மாடுகள் முதலான கால்நடைகள் துயரத்தை அனுபவிக்கும். வேளாண்மை செழித்து வரும் வேளையில் இயற்கையால் பாதிப்பு ஏற்படும் என விவரிக்கிறது வெண்பா.
இந்த வெண்பாவையும் விளக்கத்தையும் படித்தவுடன் சற்று கலக்கம் ஏற்படலாம். ஆனாலும் புத்தாண்டு பிறக்கின்ற வேளையில் இருக்கின்ற கிரக நிலைகளே, முழுமையான பலன்களைத் தரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்ற வேளையில் கிரகங்கள் நல்ல வலுவான நிலையில் இருக்கின்றன மேஷத்தில் சூரியன் உச்சமாகவும் உடன் சுக்கிர பகவானும், மற்றும் சந்திரனும் (பரணி நட்சத்திரத்தில்), ரிஷபத்தில் ராகுவும், மிதுனத்தில் செவ்வாயும், விருச்சிகத்தில் கேது பகவானும், மகரத்தில் ஆட்சி பலத்தோடு சனிபகவானும், கும்பத்தில் அதிசார குரு பகவானும், மீனத்தில் புதன் பகவான் நீசமாகவும், கிரகங்கள் வலுவாக இருக்கின்றன. (இந்த கிரக நிலைகளை திருக்கணித பஞ்சாங்கத்தின் படியாக சொல்லியிருக்கிறேன்).
இந்த பிலவ ஆண்டு நமக்கு என்ன மாதிரியான நன்மைகளைச் செய்யக் காத்திருக்கிறது என்பதை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக பார்க்க இருக்கிறோம்.
முன்னதாக, பிலவ ஆண்டுக்கான பொதுப்பலன்கள் குறித்துப் பார்ப்போம்.
பிலவ ஆண்டான தமிழ்ப் புத்தாண்டு, மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. பரணி நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்படியான வருமானம் சிறப்பாகவே இருக்கும். உணவுத் தொழில் கொடிகட்டிப் பறக்கும். விவசாயம் செழிப்பாக இருக்கும், மந்த நிலையில் இருந்த கட்டுமானத் தொழில் அசுர வேகத்தில் வளர்ச்சி பெறும். பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.
அயல்நாடு தொடர்பு உடைய தொழில்களில் மந்தநிலை ஏற்படும். வெளிநாட்டு வர்த்தகம் குறையும். பத்திரிகை மற்றும் ஊடகத் தொழில் சில பாதிப்புகளையும், பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் எந்தவொரு செய்தியையும் உறுதிப்படுத்திய பின்பே செய்தியாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற சிக்கல்களைச் சந்திக்க வேண்டியது வரும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் மிதமான வளர்ச்சி இருக்கும். அந்தத் துறையில் இருப்பவர்களுக்கு வேலை இழப்பு அல்லது வேலை மாற்றம் உண்டாகும். வாகனம் தொடர்பான தொழில் சிறப்பாகவே இருக்கும்.
அரசுப் பணியாளர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். பிரச்சினைகள், வழக்குகள் என அதிகம் சந்திக்க வேண்டியது வரும். அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலை மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். தற்போது பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்கள், உற்பத்தி தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் மன நிறைவைத் தரக் கூடிய வகையில் தொழில் வளர்ச்சி ஏற்படும். நிறுவனத்தை மூடி விடலாமா என்ற சிந்தனையில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும். அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியது வரும். அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும்.
பெண்களுக்கு உற்சாகத்தையும் மனநிறைவும் தரும்படியான ஆண்டாக பிலவ ஆண்டு இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். இந்த ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடக்கும். காரணம்...இந்த பிலவ ஆண்டு துலாம் ராசியில் அமைந்திருக்கிறது. துலாம் ராசி என்பது திருமணத்தைக் குறிக்கும் ராசி. எனவே எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான திருமணங்கள் பிலவ ஆண்டில் நடக்கும்.
மாணவர்கள் கல்வியில் மிக அதிக அளவில் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஞாபக மறதி, கவனமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தேர்ச்சி விகிதம் குறையவும் வாய்ப்பு உண்டு. கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படும், மனதையும், கவனத்தையும் ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்தினால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
திரைத்துறைக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் ஓரளவுக்கு மட்டுமே வளர்ச்சியை அடைய முடியும். எனவே அதிகப்படியான பணச் செலவில் எடுக்கும் திரைப்படங்களை சிக்கனமாக எடுக்க வேண்டியது அவசியம். இசை நாட்டியக் கலைஞர்களுக்கு நல்ல வளர்ச்சியும், அங்கீகாரமும், மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
பொதுவாக, மக்கள் அனைவரும் ஸ்ரீதுர்கையை வணங்கி வருவது நமக்கு மட்டுமின்றி, நம் தேசத்துக்கே பல நன்மைகளைத் தரும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவோம். திருக்கடையூர் அபிராமி அன்னையை வணங்கி வாருங்கள். அபிராமி அந்தாதியை தினமும் பாராயணம் செய்வதும் நல்ல வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அனைவருக்கும் தரும்.
‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்